தமிழகம்

அரசு நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்க ஊழியரும் அரசு ஊழியரே: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

அரசின் நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கங்களின் ஊழியரை, அரசு ஊழியராகத்தான் கருத வேண்டுமென லஞ்சப் புகாரில் சிக்கிய ஊழியரின் மேல் மறு ஆய்வு மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி தாலுகா, ராமநாரபுரத்தில் உள்ள மேட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில், 2016ஆம் ஆண்டு அய்யத்துரை என்பவர் 39.400 கிராம் நகையை அடமானம் வைத்து 60 ஆயிரம் விவசாய நகைக் கடன் பெற்றிருந்தார்.

தமிழக அரசு, வேளாண் கடன்களை ரத்து செய்தபோது, விவசாய நகைக் கடனும் ரத்து செய்து, நகைகளைத் திருப்பி கொடுக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி நகையைக் கேட்கச் சென்றபோது சங்கத்தின் செயலாளர் சுப்மணியம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவை திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுப்பிரமணியம் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, கூட்டுறவு சங்க ஊழியரை அரசு ஊழியராகக் கருத முடியாது என வாதிடப்பட்டது. மேலும் அரசின் நிதியுதவி பெறாத கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் அல்ல என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு மேற்கோள் காட்டப்பட்டது.

இதையடுத்து, அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறி, இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதிகள் சத்தியநராயணன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வு, தனியார் நிறுவன ஊழியர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களை அரசு ஊழியர்களாகக் கருத முடியாது என்றுதான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியது.

அரசு நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்களாகவே கருதப்படுவர் எனத் தெளிவுபடுத்திய நீதிபதிகள், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சுப்பிரமணியம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் பட்டியலிடப் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT