தமிழகம்

சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக வெற்றியைப் பறித்த போட்டி வேட்பாளர்

மு.அப்துல் முத்தலீஃப்

சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரனுக்கு சீட்டு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாகப் போட்டியிட்டார். அவரை அதிமுகவிலிருந்து நீக்கினர். இந்நிலையில் அங்கு அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் தோல்வி அடைந்தார். அவரது தோல்விக்குக் காரணமாக சுயேச்சையாகப் போட்டியிட்ட சந்திரசேகரன் வாக்குகளைப் பிரித்ததே காரணமாக அமைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டப்பேரவை தனித் தொகுதியாகும். இது மலைவாழ் மக்கள் போட்டியிடும் தொகுதியாகும். இத்தொகுதியில் 2016-ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரசேகரன் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

நடந்து முடிந்த 2021 பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சேந்தமங்கலம் தொகுதியில் அடங்கியுள்ள கொல்லிமலை வாழவந்திநாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சந்திரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதனால் சந்திரசேகரன் தனது ஆதரவாளர்களுடன் தலைமைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது தொகுதியில் 5 ஆண்டுகளாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து மக்கள் அபிமானத்தைப் பெற்றுள்ள தனக்கு வாய்ப்பளிக்காமல் பல்வேறு புகார்கள் உள்ளவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர் என சந்திரசேகரன் குற்றம் சாட்டியிருந்தார்.

தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு அமைச்சர் தங்கமணி காரணம் என்று சந்திரசேகரன் குற்றம் சாட்டியிருந்தார். சில தினங்களில் தலைமை அறிவித்த வேட்பாளரை மாற்றாவிட்டால் சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என கெடு விதித்திருந்தார். பின்னர் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதிமுக வேட்பாளரைத் தோற்கடிப்பேன் என சூளுரைத்தார்.

இதனால் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிவித்தனர்.

இந்நிலையில் அங்கு அதிமுக வேட்பாளர் சந்திரன் தீவிரப் பிரச்சாரம் செய்தார். மறுபுறம் சந்திரசேகரன் தனக்காக நியாயம் கேட்டு ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் செய்தார். இங்கு திமுக சார்பில் கே.பொன்னுசாமி போட்டியிட்டார். வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி முடிந்து, நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் பொன்னுசாமி 90,681 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சந்திரனைத் தோற்கடித்தார். சந்திரன் பெற்ற வாக்குகள் 80,188 ஆகும். 10,493 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வென்றார். இந்தத் தொகுதியில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் சந்திரசேகரன் பெற்ற வாக்குகள் 11,371. அவர் வாக்குகளைப் பிரிக்காமல் இருந்தால் 878 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வென்றிருப்பார்.

சொன்னபடி சுயேச்சையாகப் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் தோற்கவும், திமுக வேட்பாளர் வெற்றி பெறவும் சந்திரசேகரன் காரணமாக இருந்துள்ளார். இதேபோன்று பல தொகுதிகளில் வேட்பாளர்கள் அதிருப்தி இருந்ததாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT