தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், முதல்வராக பதவியேற்கவுள்ள ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 
தமிழகம்

மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆலோசனை

செய்திப்பிரிவு

தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். வரும் 7ஆம் தேதி அவர் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். அதிமுக ஆட்சியை இழந்தாலும் 65 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் எதிர்க்கட்சியாக அமர்கிறது.

இந்நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று (மே 03) ஒவ்வொருவராகச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று மாலையே தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று சென்னை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம்

புதிய அரசு பதவியேற்பு மற்றும் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் எவ்வாறு பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்துவது என, இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், தமிழகத்தில் தொற்றுப்பரவல் விகிதம், இறப்பு விகிதம், தொற்றைக் கட்டுப்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, மு.க.ஸ்டாலினை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது குறித்துதான் தன் முழு கவனமும் இருக்கிறது என,ஸ்டாலின் தெரிவித்ததாக வைகோ கூறியிருந்தார்.

SCROLL FOR NEXT