விஜயபாஸ்கர்: கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவேன்: விஜயபாஸ்கர்

செய்திப்பிரிவு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவேன் என, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். வரும் 7ஆம் தேதி அவர் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். அதிமுக ஆட்சியை இழந்தாலும் 65 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் எதிர்க்கட்சியாக அமர்கிறது.

இதனிடையே, விராலிமலை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தெரிவித்ததால், வாக்குகளை எண்ணுவதில் இழுபறி நீடித்தது. இதையடுத்து, வாக்குகள் எண்ணப்பட்டதில், மூன்றாவது முறையாக அதிமுகவின் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி, 24 மணிநேரத்துக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, இன்று (மே 03) காலையில் தனது வெற்றிச் சான்றிதழை விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து, விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று, கரோனா தடுப்புப் பணிகளில் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஈடுபடுவேன். இது மிகவும் சவாலான நேரம். இந்த சூழலில், மக்கள் தங்கள் உள்ளங்களில் கொண்டாட்டங்களை வைத்துக்கொண்டு, அரசு மற்றும் சுகாதாரத்துறையின் வழிமுறைகளை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதுதான் முதன்மையான பணி. கரோனாவைக் கட்டுப்படுத்த அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை நிச்சயம் வழங்குவேன்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT