நேர்த்திக்கடன் செலுத்திய திமுக தொண்டர்கள். 
தமிழகம்

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி; தொண்டர்கள் 106 பேர் முடி இறக்கி நேர்த்திக்கடன்

க.ராதாகிருஷ்ணன்

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, கரூரில் திமுகவினர் 106 பேர் முடி இறக்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கரூர் நகராட்சி 43-வது வார்டு திமுக வட்டச் செயலாளர் அம்பிகாபதி, மாவட்டத் தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால். இவர்கள் இருவரும் கரூர் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும், மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு, தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் முடி இறக்கி, அண்மையில் நேர்த்திக்கடன் காணிக்கை செலுத்தினர்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 02) நடைபெற்ற நிலையில், திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. திமுக மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி பெற்றார்.

இதன் காரணமாக, தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் அம்பிகாபதி, தனபால் ஆகியோர் முன்னிலையில், இன்று (மே 03) திமுக தொண்டர்கள் 106 பேர் முடி இறக்கி நேர்த்திக்கடன் காணிக்கை செலுத்தினர்.

அதன்பின், கோயிலுக்கு வெளியே நின்று சாமியை வணங்கிவிட்டு, திமுக மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜியைச் சந்தித்து அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT