நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்கள் தங்கள் சொந்த செல்வாக்கால் வெற்றியைக் கைப்பற்றியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர், இம்முறை 5 ஆயிரம் வாக்குகளில் தன்னை எதிர்த்த பாஜக வேட்பாளர் மு.போஜராஜனை வீழ்த்தினார்.
பாஜக வேட்பாளர் மு.போஜராஜனுக்கு ஆதரவாகக் கர்நாடக மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் சோமசேகர் தலைமையில் 5 பேர் அடங்கிய பொறுப்பாளர்கள் உதகையில் முழுவீச்சில் பணியாற்றினர். பிரச்சாரத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல் நடிகை நமீதா வரை வந்தனர். பாஜக சார்பில் ரூ.10 கோடி வரை செலவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் பணமில்லாமல் சிரமப்பட்டார். கூட்டணிக் கட்சிகளான திமுக, தமுமுக உட்பட கட்சிகள் தங்கள் சொந்த செலவில் பிரச்சாரம் மேற்கொண்டனர். கோத்தகிரியைச் சேர்ந்த போஜராஜன் இறக்குமதி வேட்பாளர் எனக் கூறி, பிரச்சாரத்தைக் கையில் எடுத்த ஆர்.கணேஷ், மக்களிடம் எளிமையானவர் என்ற பெயரால் வெற்றியைப் பெற்றுள்ளார்.
கூடலூர் தொகுதியை கடந்த 15 ஆண்டுகள் திமுக தன் வசம் வைத்திருந்தது. திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கூடலூர் தொகுதியை அரசியல் வியூகம் மூலம் அதிமுக தகர்த்துள்ளது. வேட்பாளர் தேர்விலேயே பெரும்பான்மை வாக்குகள் உள்ள தாயகம் திரும்பிய தமிழர்களையே வேட்பாளர்களாக அனைத்துக் கட்சியினரும் நிறுத்தினர். கூடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் மக்களிடம் நன்கு பழகக்கூடியவர் என்ற பெயர் மேலோங்கியது. மேலும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் தனது பங்குக்கு வந்து பிரச்சாரம் செய்ய பொன்.ஜெயசீலனுக்கு வெற்றி வாய்ப்பு கூடியது.
திமுக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் கடந்த முறை குன்னூரில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இந்நிலையில், குன்னூர் தொகுதி க.ராமசந்திரனுக்கு வழங்கப்பட்டதால், தனது ஆதரவாளரான காசிலிங்கத்துக்காக கூடலூர் தொகுதியைப் போராடிப் பெற்றார் முபாரக். மேலும், தனது சொந்த ஊரான குன்னூரில் பெயரளவுக்கு பிரச்சாரம் செய்தவர், கூடலூர் தொகுதியிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார்.
இதில், திமுக வேட்பாளர் தேர்வு சரியில்லை எனத் தொடக்கத்திலிருந்தே மக்களிடம் பேச்சு எழுந்தது. இதே கருத்து வாக்குப்பதிவு வரை தொடர்ந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கேதீஸ்வரன் 7000 வாக்குகள் பெற்று, திமுகவின் தோல்விக்குக் காரணமாக அமைந்தார்.
குன்னூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கப்பச்சி டி.வினோத், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் க.ராமசந்திரனுக்கு எதிராகக் களமிறங்கினார். இறக்குமதி வேட்பாளர் எனக் களமிறங்கிய வினோத், குன்னூரிலேயே தங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும், தனது பங்குக்குப் பணத்தையும் செலவிட்டார். எனினும் திமுக வேட்பாளர் க.ராமசந்திரன் சொந்த செல்வாக்கால் தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்.