பிரதமர் மோடி - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்: ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

செய்திப்பிரிவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 149 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 84 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள். தேசத்தை மேம்படுத்துவதற்கும், பிராந்திய நலன்களை நிறைவேற்றுவதற்கும், கோவிட் - 19 தொற்றுநோயை ஒழிப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி. மாநிலத்தின் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும், புகழ்பெற்ற தமிழ்க் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவோம் என்றும் தமிழக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். எங்கள் செயல்வீரர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT