தாராபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இறுதிச் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், கடைசிச் சுற்றில் செய்தியாளர்களை வெளியேறச் சொன்னதால் சர்ச்சை ஏற்பட்டது.
தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுகவில் கயல்விழி செல்வராஜ், அமமுகவில் கலாராணி, நாம் தமிழர் கட்சியில் ரஞ்சிதா, மக்கள் நீதி மய்யத்தில் சார்லி ஆகியோர் உட்பட 14 பேர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் ஆரம்பம் முதலே பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் 14-வது சுற்றில் எல்.முருகன் திடீரெனப் பின்னடவைச் சந்தித்தார். தொடர்ந்து திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் முன்னிலை வகித்து வருகிறார்.
இதற்கிடையே தாராபுரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இறுதிச் சுற்று ( 25-வது சுற்று) வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், கடைசிச் சுற்றில் விவிபாட் இயந்திரம் பழுதானது. அப்போது திடீரென டிஎஸ்பி ரமேஷ் பாபு, அங்கிருந்த செய்தியாளர்களை வெளியேறச் சொன்னதால் சர்ச்சை ஏற்பட்டது.
எனினும் மீண்டும் பேசிய செய்தியாளர்கள், உள்ளேயே இருப்போம் என்று கூறியதால் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். விவிபாட் இயந்திரம் பழுதானதால் அது சரிசெய்யப்பட்டு வருகிறது. இதனால் இறுதி நிலவரம் தெரிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவர அடிப்படையில், கயல்விழி செல்வராஜ் 85,513 வாக்குகளைப் பெற்றுள்ளார். எல்.முருகன் 84,905 வாக்குகளோடு இரண்டாவது இடத்தில் உள்ளார். இருவருக்கும் 608 வாக்குகள் வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.