எய்ம்ஸ் என எழுதப்பட்டுள்ள செங்கல்லை வழங்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, தான் போட்டியிட்ட சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், எய்ம்ஸ் என எழுதப்பட்டுள்ள செங்கல்லை மு.க.ஸ்டாலினுக்குப் பரிசாக வழங்கி உதயநிதி வாழ்த்து தெரிவித்தார். அருகில் உதயநிதியின் மகன் இன்பா உதயநிதி உள்ளிட்ட மு.க.ஸ்டாலினின் பேரன், பேத்திகள் உடனிருந்தனர்.
இந்தப் புகைப்படம் பலராலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.