தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான ஜி.கே.மணி போட்டியிட்டார். இதற்கு முன்பே பென்னாகரம் தொகுதியில் பாமக வேட்பாளராக 2 முறை போட்டியிட்டு ஜி.கே.மணி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த முறையும் பாமக சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். திமுக சார்பில் அந்தத் தொகுதியின் எம்எல்ஏவான இன்பசேகரன் போட்டியிட்டார். இரு வேட்பாளர்களும் தொகுதியில் சூறாவளியாகச் சுழன்றடித்துப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஏற்கெனவே பாமகவுக்குத் தனிப்பட்ட முறையில் பென்னாகரம் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி உண்டு.
மேலும், அதிமுக கூட்டணியில் பாமக இருந்ததால் அது பாமக வேட்பாளர் ஜி.கே.மணிக்கு மேலும் பலத்தை ஏற்படுத்தியது. எனவே, வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முதல் சுற்று முடிவுகள் வெளியானபோதே ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். முதல் சுற்றில் 1,581 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முந்தினார். அடுத்தடுத்த சுற்றுகளில் வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே சென்றது. 10-ம் சுற்று முடிவில் 12 ஆயிரத்து 805 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முந்தினார்.
இதர சுற்றுகளின் முடிவுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், அவற்றிலும் ஜி.கே.மணி முன்னிலை வகிக்கவே வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏறத்தாழ ஜி.கே.மணி வெற்றி பெறுவதற்கான நிலையிலேயே முன்னிலை நிலவரம் இருந்து வருகிறது. பாமகவின் மாநிலத் தலைவரான ஜி.கே.மணி வெற்றி பெறும் சூழல் நிலவுவதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.