தமிழகம்

துறைமுகம் தொகுதி; அசையாத திமுக கோட்டையை அசைத்துப் பார்க்கும் பாஜக

மு.அப்துல் முத்தலீஃப்

மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தபோதும் திமுகவுக்குக் கைகொடுத்த தொகுதி துறைமுகம். தமிழகத்தின் மிகச் சிறிய தொகுதி, திமுகவின் கோட்டை, வலுவான திமுக வேட்பாளர் எனப் பல அம்சங்கள் இருந்தும் பாஜக அங்கு காலூன்றும் வகையில் இத்தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளது.

துறைமுகம் தொகுதிக்கு ஒரு சிறப்பு உண்டு. எப்படி சேப்பாக்கம் தொகுதி திமுகவின் அசையாத இரும்புக்கோட்டையோ அதேபோன்று துறைமுகம் தொகுதியும் திமுகவின் கோட்டையாக விளங்கியது. தமிழகத்தில் திமுக முதன்முதலாகத் தோல்வியைச் சந்தித்த 1977ஆம் ஆண்டிலேயே துறைமுகம் தொகுதியில் தோற்கவில்லை.

அதன்பின் நடந்த 10 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் ஒரு இடைத்தேர்தலில் திமுக 10 முறை வென்றுள்ளது. திமுகவின் சோதனையான காலகட்டம் என்று சொல்லப்படும் 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி சுடப்பட்டு, எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட எழுச்சியிலும் துறைமுகம் தொகுதியில் திமுக வென்றது. 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நேரத்தில் எழுந்த அலையில் திமுக காணாமல் போனது. அப்போதும் துறைமுகம் தொகுதியில் திமுக வென்றது.

அதன் பின்னர் கருணாநிதி ராஜினாமா செய்த நிலையில் நடந்த இடைத்தேர்தலிலும் திமுகவே வென்றது. அதன் பின்னர் அங்கு பேராசிரியர் க.அன்பழகன் 3 முறை நின்று வென்றார். 2011ஆம் ஆண்டு சென்னையில் திமுகவின் மீதான் அதிருப்தியால் பல இடங்களில் தோற்றபோது மட்டும் ஒரே தடவை அதிமுக வென்றது. அதன் பின்னர் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சேகர்பாபு வென்றார்.

துறைமுகம் தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். வடமாநிலத்தவரும் அதிகம் வசிக்கின்றனர். இதனால் இத்தொகுதியில் பொறுப்பாளராக வினோஜ் செல்வத்தைப் போட்டு பாஜக வேலை செய்தது. அதன் பலன் வினோஜ் முன்னிலை பெற்றுள்ளார். திமுகவின் கோட்டையான தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. கோட்டையில் கொடி நாட்டுமா பாஜக? என்பது மாலையில் தெரியவரும்.

SCROLL FOR NEXT