பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தமிழகத்தில் மின்சார வாகனங்கள் வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 9,567 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, மாற்று எரிசக்தி மூலம் வாகனங்களை இயக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதையொட்டி, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மேலும், குறைந்த செலவிலான மின்சார வாகனங்களை உருவாக்குவது, தரமான சார்ஜர் மையங்கள் அமைப்பது, மின்சார வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்க புதிய சலுகைகள் வழங்குவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மத்திய, மாநில அரசுகளின் சலுகையைப் பெற்று, மின்சார வாகனங்களை வாங்க பொதுமக்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
2017-ல் 124-ஆக இருந்த மின்சார வாகன விற்பனை எண்ணிக்கை, கடந்த ஏப்.24-ம் தேதி 9,567-ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 95 சதவீதம் இருசக்கர வாகனங்களாகும்.
விலை சற்று அதிகம்தான்
இதுகுறித்து வாகன விற்பனையாளர்கள் கூறும்போது, ‘‘பெட்ரோல் வாகனங்களை ஒப்பிடும்போது மின்சார வாகனங்களின் விலை சற்று அதிகம்தான். ஆனால், அன்றாட பெட்ரோல் செலவைக் கணக்கிடும்போது, மின்சார வாகனங்கள்தான் சிறந்தவை. இதை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். மேலும், மத்திய, மாநில அரசுகளும் வரிச் சலுகை அளித்துள்ளதால், தற்போது மின்சார வாகனங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்’’ என்றனர்.
வாகன ஓட்டிகள் சிலர் கூறும்போது, ‘‘ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92-க்கு விற்கப்படுகிறது. மேலும், பெட்ரோல் விலை தினமும் மாற்றப்படுகிறது. இதனால், எரிபொருள் செலவு அதிகரித்து வருகிறது. ஆனால், கூடுதலாக செலவு செய்து மின்சார வாகனத்தை வாங்கினால், அன்றாட பெட்ரோல் செலவு மீதமாகும். இரண்டு யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினாலே, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான தூரத்துக்கு பயணம் செய்யலாம். மேலும், 90 சதவீதம் எரிபொருள் செலவை சேமிக்கலாம்’’ என்றனர்.
பயன்பாடு அதிகரிக்கும்
தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எரிபொருளைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில், மின்சார வாகனங்களுக்கு தமிழக அரசு வரிச் சலுகை அளித்துள்ளது. மற்றொருபுறம், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால், மக்களும் மின்சாரவாகனங்களுக்கு மாறத் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு ஏப்.24-ம் தேதி நிலவரப்படி 9,567 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெருமளவு ஸ்கூட்டர் வகையிலானவையாகும்.
பேட்டரி, சார்ஜிங் மையங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் மேம்படும்போது, அனைத்து வகையான மின்சார வாகனங்களையும் மக்கள் வாங்குவார்கள். இதற்கானதொலைநோக்குத் திட்டங்களை மத்திய,மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன’’என்றனர்.