ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான சித்திரை தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு கொடிமர மண்டபம் வந்தடைந்தார். அங்கு காலை 5.30 மணி முதல் காலை 6.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நம்பெருமாள் கொடிமர மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை பேரிதாடனம் நடைபெற்றது. அதன்பின், நம்பெருமாள் உபயநாச்சியார் களுடன் புறப்பட்டு கருடமண்டபம், சந்தனு மண்டபம் வழியாக யாக சாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி கோயில் வளாகத்தில் வலம் வந்து கருடமண்டபத்தில் எழுந்தருளுவார். மே 7-ம் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் மே 9-ம் தேதி நடைபெறும். ஆனால் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நம்பெருமாள் சித்திரை தேருக்கு பதிலாக அன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 10-ம் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான மே 11-ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தலைமையில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்துள்ளனர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதால், சித்திரை தேர்த்திருவிழா நிகழ்ச்சிகளை https://srirangam.org என்ற இணையதளத்திலும், srirangam temple என்ற யூடியூப் சேனலிலும் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.