தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் இளவேனிலின் ‘இளவேனில் எழுத்தில் - வாளோடும் தேன் சிந்தும் மலர் களோடும் - புரட்சியும் எதிர்ப் புரட்சியும்’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை தி.நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டு ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
ஆதிதிராவிடர், பழங்குடி யினருக்கு எதிரான வன்கொடுமை கள் பல இடங்களில் நடந்து வருகின்றன. வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக தமிழகத்தில் அமல்படுத்தப் படுவதில்லை. இதனால், இச்சட்டத் தின் மூலம் ஒடுக்கப்பட்ட வர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைப்பதில்லை.
இந்நிலையில், பள்ளி விடுதிகளில் மட்டுமல்லாமல், பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடு மைகள் அதிகரித்துக் கொண்டிருக் கின்றன. இதுபோன்ற பிரச்சி னைகள் குறித்த சரியான பார்வையை முன்வைத்து சமூக மாற்றத்துக்காக படைப்பாளிகள் உதவ வேண்டும்.
இவ்வாறு ராமகிருஷ்ணன் பேசினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது, ‘‘வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பெரும்பாலான புகார்கள் நிராகரிக்கப்படுகின்றன. தலித்துகள், இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக சிலர் புகார் கூறுகின்றனர். இச்சட்டத்தைப் பயன்படுத்தி தலித்துகள் புகார் மட்டுமே அளிக்க முடியும். காவல்துறையினர்தான் சட்டத்தை அமல்படுத்தும் இடத்தில் இருக்கின்றனர். குற்றம் கூறுபவர்கள், காவல் துறையைத்தான் குறை கூற வேண்டும்’’ என்றார்.
கட்டுரைத் தொகுப்பின் முதல் பிரதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நீதியரசர் கே.சந்துரு, திரைப்பட இயக்குநர் ஜனநாதன், கவிஞர் தணிகைச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.