கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கான 24 மணிநேரம் இயங்கும் முதற்கட்ட பரிசோதனை மையம் சென்னை தீவுத்திடல் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேற்று தொடங்கப்பட்டது.
சென்னையில் கரோனா தொற்றுஉறுதி செய்யப்படும் நோயாளிகளை நேரடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பாமல் அவர்களின் நோய்த் தாக்க நிலையை அறிந்து மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையம் அல்லது வீடுகளில் தனிமையில் இருக்க அறிவுறுத்த ஏதுவாக 11 இடங்களில் மாநகராட்சி சார்பில் முதற்கட்ட பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு ரத்தப் பரிசோதனை, ஆக்சிஜன் பரிசோதனை, எக்ஸ்ரே போன்ற அடிப்படை பரிசோதனை செய்யப்படுகின்றன. இந்த மையங்கள் காலை முதல் மாலை வரை மட்டுமே இயங்கி வந்தன.
தற்போது சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளும் அதிகஅளவில் வருவதால் நிலமையைச்சமாளிக்க, சென்னை தீவுத்திடல் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதற்கட்ட உடற்பரிசோதனை மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இம் மையத்தை சென்னை மாநகராட்சிக்கான கரோனா பரவல் தடுப்பு பணி சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரில் 70 சதவீதம் பேருக்கு மருத்துவ சிகிச்சை தேவையில்லை. வீட்டு தனிமையில் இருந்தாலே குணமாகி விடுவார்கள். பெரும்பாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பதற்றத்தில் ஆம்புலன்சில் நேராக அரசு மருத்துவமனைகளுக்கு வந்துவிடுகின்றனர். இதனால் அங்கு மருத்துவர்களுக்கு வேலை பளு அதிகமாகி விடுகிறது. ஆம்புலன்ஸ்களும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு சென்னையில் 11 இடங்களில் முதற்கட்ட பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. அதை மேலும்அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக தீவுத்திடல் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 24 மணி நேரம்இயங்கும் மையம் அமைக்கப்பட் டுள்ளது.
இதை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவர்கள் இணைந்து இயக்குகின்றனர். தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம்.
நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் படுக்கையை உறுதிசெய்ய ‘104’ என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். தனியார் மருத்துவமனையில் படுக்கைகள் இருப்பு நிலவரத்தை கேட்டாலும், தனியார் மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைப்பு ஏற்படுத்தி உதவிகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், இணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.