சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியில் சுற்றினால், ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளர்கள், போலீஸார் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என சுமார் 70 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால், தற்போது சிகிச்சை பெற்று வரும்31 ஆயிரம் கரோனா நோயாளிகளில் 619 பேர் மட்டுமே முன்களப் பணியாளர்களாக உள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்று முதல் அலையின்போது 26 முன்களப் பணியாளர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்தனர். 2-வது அலையில் ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதற்கு தடுப்பூசியின் வலிமைதான் காரணம்.
தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் சுமார் 70 சதவீதம் பேர் வீடுகளில் தனிமையில் உள்ளனர். அவர்களுக்கான பால், மளிகை, காய்கறி, மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மாநகராட்சி சார்பில் 2 ஆயிரம் களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தும், வீட்டு தனிமையில் உள்ள சில நோயாளிகள் வெளியில் சுற்றுவதாகப் புகார்கள் வருகின்றன. அவ்வாறு வெளியில் சுற்றினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என விதிகள் உள்ளன. இதுவரை அந்த விதியைப் பிரயோகப்படுத்தி அபராதம் விதித்ததில்லை. தற்போதைய கரோனா பரவல் சூழலில் அபராதம் விதிக்க வேண்டியுள்ளது. எனவே, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வெளியில் சுற்றுவது தெரியவந்தால், ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டால், அவர்கள் கரோனா சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.