தமிழகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி: ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து அரசாணை

செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கரோனா பரவல்காரணமாக, ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் மூலம் தினமும் 1,050 டன் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்கமுடியும் என்றும் அதற்கு அனுமதிகோரியும் உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. முதல்வர் பழனிசாமி தலைமையில் கடந்த 26-ம்தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஆக்சிஜன் தயாரிப்புக்காக 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து நடத்த அனுமதிப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து ஆக்சிஜன் தயாரிப்புக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், ஆலையை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில்கண்காணிப்புக் குழுவை அமைத்துதமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட அரசாணை:

தூத்துக்குடி வேதாந்தா நிறுவனவளாகத்தில் ஆக்சிஜன் தயாரிப்புபணியை முழுமையாக கண்காணிக்க குழு அமைக்கப்படுகிறது. அக்குழுவுக்கு தூத்துக்குடி மாவட்டஆட்சியர் தலைவராக இருப்பார்.தூத்துக்குடி எஸ்.பி., சார் ஆட்சியர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர், தூத்துக்குடி அனல்மின் நிலைய துணை தலைமை விஞ்ஞானி ஜோசப் பெல்லார்மின் ஆண்டன் சோரிஸ் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2 சுகாதார வல்லுநர்கள் ஆகியோரை உறுப்பினராக கொண்டு குழு அமைக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல், பாதுகாப்பு விதிகளின்படி ஆலை இயங்குவதற்கான உத்தரவை கண்காணிப்புக் குழுவழங்கியதும், வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையைஇயக்கும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆலை இயங்குகிறதா என்பதை குழு கண்காணிக்கும். ஆக்சிஜன் தயாரிப்புக்காக எத்தனைபணியாளர்களை உள்ளே செல்ல அனுமதிப்பது என்பதையும் குழுவேமுடிவெடுக்கும். ஆலையைச் சுற்றி உள்ள பகுதிகளில் வசிப்போருக்கு இதனால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றை தீர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும்.

அங்கு நடக்கும் பணிகள் குறித்துதூத்துக்குடி ஆட்சியர் அவ்வப்போது அரசுக்கு அறிக்கை அளிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, மற்ற துறைகளும் உரிய ஒப்புதல்களை, விதிகளுக்கு உட்பட்டு துறை அலுவலர்களுக்கு விரைவாக வழங்குமாறு சுற்றுச்சூழல், வனத்துறை செயலர் சந்தீப் சக்சேனா தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார்.

வேதாந்தா நிறுவனம் அறிக்கை

வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தூத்துக்குடிஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மீண்டும் திறக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை நகல் கிடைத்துள்ளது. தேவையான அனுமதிகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மீண்டும் செயல்படவைக்க நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி. மின் இணைப்பு தரப்பட்டதும் பணிகளை தொடங்க எங்கள் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT