நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவுக் கணக்கை பார்வையிட 39 மத்திய பார்வையாளர்கள் தமிழகத்துக்கு வரும் 16-ம் தேதி மீண்டும் வருகின்றனர்.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது வேட்பாளரின் அதிகபட்ச செலவுத் தொகை ரூ.40 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இதை ரூ.70 லட்சமாக மத்திய தேர்தல் ஆணையம் உயர்த்தியது.
மொத்தம் 835 பேர் போட்டி
சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட 835 பேர் போட்டியிட்டனர். தமிழகத்தில் வேட்பாளர்களின் செலவுக் கணக்கைக் கண்காணிக்க தொகுதிக்கு ஒருவர் என 39 மத்திய வருவாய்ப் பணி அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வந்து முகாமிட்டு, வேட்பாளர்களின் செலவுக்கணக்கை கண்காணித்து வந்தனர். அவர்களது செலவுகளை நிழல் பதிவேட்டில் பதிவு செய்தனர். தேர்தல் முடிந்ததும் தங்களது வழக்கமான பணிக்கு திரும்பிவிட்டனர்.
தேர்தல் நடவடிக்கைகள் முடிந்து, ஒரு மாத காலத்துக்குள் வேட்பாளர்கள் தங்கள் செலவுக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் அதை சரிபார்க்க தமிழகத்துக்கு அவர்கள் மீண்டும் வருகை தரவுள்ளனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் திங்கள்கிழமை கூறியதாவது:
கணக்கு தாக்கல் தீவிரம்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்கள் செலவிட்ட தொகை பற்றிய கணக்குகளை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் (ஆட்சியர், மாநகர ஆணையர்கள்) வேட்பாளர்கள் சமர்ப்பித்து வருகின்றனர். வரும் 16-ம் தேதிக்குள் கணக்கை தாக்கல் செய்யவேண்டும். அதை சரிபார்க்க, மத்திய செலவுக்கணக்குப் பார்வையாளர்கள் மீண்டும் தமிழகத்துக்கு வரும் 16-ம் தேதி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கான தொகுதிக்கு சென்று ஒரு வாரம் தங்கியிருப்பார்கள். ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த நிழல் பதிவேட்டில் உள்ள விவரங்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவுக்கணக்குடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். ஒரு வார காலம் இப்பணி நடைபெறும். அதன்பிறகு எங்களிடம் அறிக்கை அளிப்பார்கள். நாங்கள் அதை சரிபார்த்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்போம்.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.