கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்படுவோருக்கு எந்தவித தடையுமின்றி சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்பு வைத்தல், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகரித்தல், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை போதுமான அளவில் வழங்குதல் உட்பட பல்வேறு நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் மருந்து வர்த்தகர்கள் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. மீறி பதுக்கலில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி அதை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்த சாம்பசிவம் (46), வேலூர் மாவட்டம் கண்டிபேறுவைச் சேர்ந்த ராமு (29) ஆகிய இருவரை வேப்பேரி போலீஸார் கைது செய்துள்ளனர். இதேபோல் வில்லிவாக்கம் திருவீதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (33), எர்ணாவூரைச் சேர்ந்த ஜாஸ்பர் ஜானோ (31) ஆகிய இருவரை ஐசிஎப் போலீஸாரும் கைது செய்துள்ளனர்.
ரூ.15 ஆயிரம் வரை..
இவர்கள் 4 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கிய மருந்தான ரெம்டெசிவிர் மருந்தை ரூ.15 ஆயிரம் வரை விலை வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அலைமோதிய கூட்டம்
இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதுகிறது.
மருந்தை வாங்க 12 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. பலர் முதல் நாள் இரவிலிருந்து விடிய, விடிய காத்திருந்து மருந்தை வாங்குகின்றனர். 5-வது நாளான நேற்று சென்னை மட்டுமில்லாமல் மதுரை, திருச்சி, வேலூர், கடலூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருந்து வாங்க வந்திருந்தனர்.
இதுதொடர்பாக மருந்து வாங்க வந்தவர்களிடம் கேட்டபோது, “கூடுதல் கவுன்டர்களை திறந்து 24 மணி நேரமும் மருந்து விற்பனை செய்ய வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மருந்து விற்பனை மையத்தை திறக்க வேண்டும்” என்றனர்.