விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து போகும்படி எச்சரித்தபோது பெண் காவலர் ஒருவர் தாக்கப்பட்டார்.
சிவகாசி அருகே விளாம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.(வலது) தலையில் காயமடைந்த பெண் காவலர் கீர்த்திகா. சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள வேண்டுராயபுரத்தில் சில நாட்களாக ஆடுகள், கோழிகள் திருடுபோனது.
சிவகாசி அருகே உள்ள துலுக்கப்பட்டியைச் சேர்ந்த சக்தி என்பவர் தனது நண்பர்களுடன் 2 நாட்களுக்கு முன்சந்தேகத்துக்கிடமாக வேண்டு ராயபுரத்தில் சுற்றி வந்தார்.
சந்தேகத்தின் பேரில் சிலர் சக்தியைத் தாக்கினர். இதில் காயமடைந்த சக்தி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக, வேண்டுராயபுரம் கிராமத்தினரும், துலுக்கப்பட்டியைச் சேர்ந்தவர் களும் மல்லி காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்தனர். இதில், ஒரு தரப்பினருக்கு ஆதர வாக போலீஸார் செயல்படுவதாகக் கூறி, துலுக்கப்பட்டியைச் சேர்ந்த மக்கள் நேற்று காலை சிவகாசி -ஆலங்குளம் சாலையில் விளாம்பட்டியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாறனேரி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டிருந்த துலுக்கப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் உடலில் மண்ணெண் ணையை ஊற்றித் தற்கொலைக்கு முயன்ற தாகக் கூறப்படுகிறது. அதை தடுக்கச் சென்ற பெண் காவலர் கீர்த்திகாவை, அங்கிருந்த சிலர் தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மாறனேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.