விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இயல்பு நிலை திரும்பும் வரை தலா ரூ.7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கும் மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று (ஏப். 30) நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
மேலும், "100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆகவும், தினக் கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்த வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் மூத்த குடிமக்களையும் அனுமதிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து உணவுப் பொருட்களையும் இலவசமாக வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.தங்கதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் ஏ.பழனிசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.செல்வராஜு, மாவட்டப் பொருளாளர் எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சாலை மைய தடுப்புச் சுவர்:
இதேபோல், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் அந்தநல்லூர் ஒன்றிய துணைத் தலைவர் ஆர்.இளவரசன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், "திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், முத்தரசநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன் கோயிலில் இருந்து முருங்கப்பேட்டை பேருந்து நிலையம் வரையிலான பகுதிக்குள் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. இந்த விபத்துகளில் பெரும்பாலும் உயிரிழப்பு நேரிடுகிறது.
எனவே, காளியம்மன் கோயிலில் இருந்து முருங்கப்பேட்டை பேருந்து நிலையம் வரை சாலையில் மையத்தில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.