தனியார் மருத்துவமனைகள் தேவையில்லாமல் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கரோனா தொற்றுக்கு 'ரெம்டெசிவிர்' என்ற மருந்து பயனளிப்பதாகக் கூறி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தை, மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.
பல தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்து இருப்பு இல்லாததால், வெளியில் இருந்து மருந்தை வாங்கி வரும்படி உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டை வைத்துக்கொண்டு, ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் கடை கடையாக அலைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "ரெம்டெசிவிர் ஒரு மேஜிக் மருந்து இல்லை என எய்ம்ஸ் மருத்துவர்கள் சொல்கின்றனர். கரோனா நோயாளிகள் எல்லோருக்கும் அந்த மருந்து தேவையில்லை.
வருபவர், போவோர் எல்லோரிடமும் ரெம்டெசிவிர் மருந்து வாங்கி வாருங்கள் என பரிந்துரைக்கக் கூடாது. இது தவறான போக்கு. வழிமுறைகளை மீறி, பீதியை கிளப்பும் விதத்தில் தனியார் மருத்துவமனை ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைத்தால், அம்மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.