மேட்டூர் அணை 16 கண் மதகு பகுதியில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள். 
தமிழகம்

மேட்டூர் அணை 16 கண் மதகில் பராமரிப்புப் பணி தொடக்கம்

செய்திப்பிரிவு

மேட்டூர் அணையில் உபரி நீர்போக்கியான 16 கண் மதகு பகுதியில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் பருவ மழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும். ஆண்டுதோறும் கோடை காலத்தில் மதகுகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

அணையில் தற்போது, 16 கண் மதகு பகுதியில் , அணை பணியாளர்களைக் கொண்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதகு ரோலர்கள், சங்கிலிகளில் கிரிஸ் வைப்பது, மதகுகளில் இருக்கும் அழுக்குகள் மற்றும் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இரும்புத்துரு ஆகியவற்றை அகற்றி, வண்ணம் பூசுதல் உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மேட்டூர் அணையில் வெள்ளநீரை வெளியேற்ற உதவும் 16 கண் மதகுகளில் பராமரிப்புப் பணிகள் ஒரு வாரத்துக்குள் நிறைவடையும். தொடர்ந்து, 8 உயர்மட்ட மதகுகள், 5 கீழ் மட்ட மதகுகள் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்படும்.

அணையில் தற்போது 90 அடிக்கு மேல் நீர் உள்ளதால், அவசர கால மதகுகளை கீழிறக்கிவிட்டு, மேல் மட்ட மதகுகள், கீழ் மட்ட மதகுகள் ஆகியவற்றில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே, அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 2,469 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,597 கனஅடியாக உயர்ந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 97.77 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 97.87 அடியானது. நீர் இருப்பு 62.11 டிஎம்சி-யாக இருந்தது.

SCROLL FOR NEXT