நில ஆக்கிரமிப்பு புகாரில் குற்றச்சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும் அவரை ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த நரசிம்மன், தமிழ்நாடு மருத்துவ சேவை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் காட்டாங்குளத்தூர் கோனாதி கிராமத்தில் வரதராஜுலு என்பவரிடம் இருந்து 25 சென்ட் நிலம் வாங்கி செங்கல்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் 1964-ல் பதிவும் செய்தார்.
இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, கட்டிடம் கட்டியுள்ளனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் நரசிம்மன் 2017-ல் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வேளச்சேரியை சேர்ந்த வீரபத்திரன், முனுசாமி, கட்டிட ஒப்பந்ததாரர் குமாரராஜ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கட்டிடத்தை அகற்ற வேண்டும்
இவ்வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி முனுசாமி, குமாரராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018-ல் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தனது நிலத்தில் உள்ள கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் நரசிம்மன் மனு தாக்கல் செய்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணையின்போது, செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “குற்றம்சாட்டப்பட்டவர்களின் முன் ஜாமீன் மனு 2018-ல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை குறித்து செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் பதில் மனுவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
எனவே, இதுகுறித்து விளக்கம் அளிக்க செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் இன்று (ஏப்.30) காணொலி மூலம் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.