வேளச்சேரி மேம்பாலப் பணிகள் இன்னும் 4 மாதங்களில் நிறைவடையும். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வேளச்சேரியும் ஒன்று. இங்குள்ள பிரதான சாலையில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம், வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழி சாலைகளை இணைத்து மேம்பாலம் கட்டப்படும் என்றும், இந்த மேம்பாலத்துடன் வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட நடைபாதை அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2012-ம்ஆண்டு அறிவித்தது.
ஆனால், பல்வேறு காரணங்களால் பணிகள் மந்தமாக நடைபெற்றன. இதற்கிடையே நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இப்பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்ட நிலையில் மேம்பாலப்பணிகள் வேக மெடுத்தன. தற்போது பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் 3 முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் ரூ.108 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஜிஎஸ்டி, மணல் தட்டுப்பாடு பிரச்சினைகளால் சில மாதங்களாக மேம்பாலப் பணிகள் மெத்தனமாக நடந்தன. மற்றொருபுறம் நிலம் கையகப்படுத்துவதிலும் சிக்கல் இருந்ததால், பல மாதங்களாக பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை.
தற்போது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த 4 மாதங்களில் மேம்பாலப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.