ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நாட்களில் மதுரையில் பழ வியாபாரம் களைகட்டும். விழாவுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், வீடு திரும்பும்போது பழங்களை வாங்கிச் செல்வார்கள். குறிப்பாக பலாப்பழங்களுக்கு இந்த விழா நேரத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் இல்லாமல் சித்திரைத் திருவிழா கோயில் வளாகங்களில் உள்விழாவாக நடத்தப்பட்டு வருவ தால் பழ வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை, பண்ருட்டி, சிறுமலை மற்றும் கேரளாவில் இருந்து மதுரைக்கு பலாப் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு யானைக்கல் பகுதியில் விற்பனை நடைபெறும்.
ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தபின், வைகை ஆற்றில் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்துவர்.
பின்பு யானைக்கல் பகுதியிலுள்ள பலாப்பழ கடை களில் பலாப் பழங்கள் வாங்கிச் செல்வார்கள்.
இதுகுறித்து வியாபாரிகள் தெரிவித்ததாவது, “வழக்கமாக சித்திரை திருவிழா நாட்களில் பலாப்பழங்கள் அதன் தரத்துக்கேற்ப 200 முதல் 500 ரூபாய் வரை விலை போகும், தற்போது ரூ.100 முதல் 300 வரையே விலை உள்ள போதும் விற்பனையாகவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரைத் திருவிழா நடக்காததால் வியாபாரம் பாதிக்கப்பட்டு நாங்கள் தவித்து வருகிறோம். இதனால் விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த பழங்கள் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது,” என்றனர்.