சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜெராக்ஸ் கடையில் ரூ.500-க்கு பிறப்பு சான்றை விற்பதாகப் புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீமாங் திட்டத்தில் 24 மணி நேரமும் பிரவசம் பார்க்கப்படுகிறது. இதனால் இங்கு சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், திருப்புவனம் ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக வருகின்றனர். ஆண்டுக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் குழந்தைகள் வரை பிறக் கின்றன. தினமும் சராசரியாக 10 முதல் 15 குழந்தைகள் பிறக்கின்றன.இம்மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பொது சுகாதாரத்துறை மூலம் இணையதளத்தில் பதிவு செய்து பிறப்புச் சான்று வழங்கப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் தலா ஒரு சுகாதார ஆய்வாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளனர். ஆனால் அவர்கள் நேரடியாக பிறப்பு சான்றுகளை வழங்குவதில்லை. ஒரு சிட்டையை எழுதி கொடுத்து அருகேயுள்ள ஜெராக்ஸ் கடையில் பிறப்பு சான்றை வாங்கி கொள்ளுமாறு தெரிவிக்கின்றனர்.
அந்த சிட்டையை ஜெராக்ஸ் கடையில் கொடுத்தால் ரூ.350 முதல் ரூ.500 வரை பெற்று கொண்டு பிறப்பு சான்றை கொடுக்கின்றனர். ஜெராக்ஸ் கடையில் பிறப்பு சான்றுகளை விற்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இடையமேலூரைச் சேர்ந்த சிவக்குமார் கூறுகையில், ‘சிவகங்கை அரசு மருத்துவ மனையில் எனது மனைவிக்கு சில வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. பிறப்புச் சான்று வாங்க சென்றபோது, ஜெராக்ஸ் கடையில் வாங்கி கொள்ளுமாறு சுகாதாரத் துறை ஊழியர்கள் தெரிவித்தனர். கடைக்குச் சென்றால் அங்கு ரூ.350 கொடுத்தால் தான் பிறப்பு சான்று தர முடியும் என்று தெரிவித்தனர். வேறு வழியின்றி பணம் கொடுத்து சான்று பெற்றேன்,’ என்றார்.
இதுகுறித்து பொதுசுகாதார துணை இயக்குநர் யசோதா மணியிடம் கேட்டபோது, "சம்பந் தப்பட்ட பணியாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும்" என்றார்.