தி.மலையில் உள்ள அண்ணா மலையில் வாழும் வன விலங்குகள் தண்ணீரை தேடி சமதள பகுதிக்கு அதிகளவில் வருகின்றன.
திருவண்ணாமலையில் அக்னி மலையாக உள்ளது மகா தீபம் ஏற்றப்படும் ‘அண்ணாமலை’. 2,668 அடி உயரமும், 10 கி.மீ., சுற்றளவும் கொண்டதாகும். ஆன்மிக பக்தர்களால் வணங்கப்படும், இந்த மலையில் ஆயிரக்கணக்கான வன விலங்குகள் வாழ்கின்றன. அவற்றில் புள்ளிமான், மயில், முயல், காட்டுபன்றிகள் மற்றும் குரங்குகள் அதிகம் உள்ளன.
மழைக் காலங்களில் பசுமையாக காட்சி தரும் அண்ணாமலை, கோடை காலத்தில் வறண்டு காணப் படுகிறது. மழைக் காலங்களில் தேங்கிய தண்ணீர் முழுவதும் வற்றிபோய்விடுகிறது. மலையில் உள்ள மண்ணில் ஈரப்பதமும் இல்லை. இதனால் மரங்கள் அனைத்தும் காய்ந்துவிடுகிறது. இயற்கை உணவும் கிடைக்காமல், தாகம் தணிக்கவும் முடியாமல் வன விலங்குகள் தவிக்கின்றன.
வன விலங்குகளின் தாகத்தை தணிக்க வனத்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் முயற்சித்தும் பலனில்லை. தொண்டு நிறுவனங்களின் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ள குட்டைகளில் நிரப்பப்படும் தண்ணீர், வன விலங்குகளுக்கு பற்றாக்குறை யாகவே உள்ளது. மலைகளில் வாழும் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீரை சேமிக்க, வனத் துறையும் முழு கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது.
அண்ணாமலையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், தாகத்தை தணிக்க கிரிவலப் பாதையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளன. தண்ணீரை தேடி மலையடிவாரம் மற்றும் சமதள பகுதிக்கு வரும் மான்கள் மற்றும் குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அவ்வழியாக செல்பவர்கள் காய்கறிகள் மற்றும் தின்பண்டங்களை கொடுத்து வருகின்றனர். விவசாய நிலங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரை பருகி வன விலங்குகள் தாகம் தணிக்கின்றன.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “அண்ணாமலையில் வாழும் ஆயிரக்கணக்கான வன விலங்குகள், தண்ணீர் இல்லாமல் சமதள பகுதிக்கு அதிகளவில் வருகின்றன. கிரிவலப் பாதையில் சுற்றும் வன விலங்குகள், விபத்துகளில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. நாய்கள் மற்றும் வேட்டை கும்பலிடம் சிக்கி மான்கள் உயிரிழக்கின்றன. விவசாயக் கிணற்றில் விழுந்தும் மான்கள் இறந்து போகின்றன. மலையில் தண்ணீரை தேக்கி வைத்தால் வன விலங்குகள் பாதுகாக்கப்படும். கான்கிரீட் அல்லாமல் மலையில் குட்டை அமைத்து, அதில் தண்ணீரை தேக்கி வைத்து வன விலங்குகளின் தாகத்தை தணிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.