திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்கி, ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (ஏப். 29) வெளியிட்ட அறிக்கை:
"ஆக்சிஜன் வாயு உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றியதோடு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் 2016-ம் ஆண்டு முதல் ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்கூடம், பெல் நிறுவனத்தின் மேலாண்மை பிரச்சினை காரணமாகச் செயல்படாமல் உள்ளது. அந்த ஆக்சிஜன் கூடத்தை மீண்டும் செயல்படவைத்தால் நாள்தோறும் 400 சிலிண்டர் அளவுக்கு ஆக்சிஜனைப் பெற முடியும்.
ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக உள்ள இந்தக் காலகட்டத்தில், பெல் நிறுவனத்தை மீண்டும் ஆக்சிஜன் தயாரிப்புக்குப் பயன்படுத்தினால் மிகுந்த பயனளிக்கும். எனவே, மக்களின் நலன் கருதி திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.