தமிழகம்

ரெம்டெசிவிரைத் தாண்டியும் நல்ல மருந்துகள் இருக்கின்றன; புதுவை ஆளுநர் தமிழிசை பேச்சு

அ.முன்னடியான்

ரெம்டெசிவிரைத் தாண்டியும் நல்ல மருந்துகள் இருக்கின்றன என்றும், அவற்றாலும் நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் எனவும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''புதுச்சேரியில் புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் இருந்து மயக்க மருந்து நிபுணர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு உதவி செய்ய அமர்த்தப்பட்டுள்ளனர். ஜிப்மரில் படுக்கைகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் படுக்கை வசதிகளை அதிகரித்துள்ளோம். புதிதாக வென்டிலேட்டர்கள் வாங்குகிறோம். ஆக்ஸிஜன் படுக்கைகளையும் அதிகரித்திருக்கிறோம்.

ரெம்டெசிவிர் மருந்தைப் பொறுத்தவரை அதற்கெனச் சில வழிமுறைகள் இருக்கின்றன. அதையும் மீறி அந்த மருந்தைப் போட்டால் சரியாகிவிடும் எனச் சில மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கின்றனர். மக்களும் ரெம்டெசிவிர் மருந்துக்காக 3, 4 நாட்கள் வரை கூட்டம் கூட்டமாகக் காத்துக் கிடக்கின்றனர். அவர்களைப் பார்க்கின்றபோது எனது மனம் மிகுந்த வேதனை அடைகிறது. ஆகவே மருத்துவர்கள் ரெம்டெசிவிர் எப்போது வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு மக்களுக்கு எழுதிக்கொடுக்க வேண்டும். ரெம்டெசிவிர் நல்ல மருந்துதான். ஆனால் அதனையும் தாண்டி நல்ல ஆக்சிஜன், ஸ்டீராய்டு உள்ளிட்ட அவசர கால மருந்துகளால் நோயாளிகளைக் காப்பாற்ற முடியும்.

ரெம்டெசிவிர் மருந்தினால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்ற மாயத்தோற்றத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம். ரெம்டெசிவிர் மருந்து பெறத் தமிழகத்தில் நல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதற்காகத் தமிழக அரசை நாம் பாராட்ட வேண்டும். இருப்பினும் அதனை முறைப்படுத்த வேண்டும். மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும்போது கரோனாவுக்கு ரெம்டெசிவிர் மட்டும்தான் மருந்து என்று மக்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடாது.

புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்துகளைப் பொறுத்தவரை எந்த விதத்திலும் தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தொடர்ந்து ஏற்பாடு செய்கிறோம். ஹைதராபாத்தில் இருந்து நானே ஆயிரம் குப்பிகள் வாங்கி வந்தேன். தற்போது 1000 ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள் யைிருப்பில் இருக்கின்றன. தனியாக விற்பனை செய்யாததற்குக் காரணம் எந்தெந்த மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் வேண்டும் என நினைக்கின்றனரோ அவர்களுக்கு அரசு மூலமே வழங்கி வருகிறோம்.

அண்மையில் கூட ஜிப்மர் மருத்துவமனைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான ஊசி, மருந்து உள்ளிட்டவற்றையும் அரசே கொடுக்கிறது. யாரேனும் ரெம்டெசிவிர் மருந்து வேண்டுமென்று கேட்டாலும் அவர்களுக்குக் கொடுத்து உதவுகிறோம். ஆனால் ரெம்டெசிவிர் மட்டும்தான் தீர்வு என்ற தோற்றம் மக்களிடம் இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.''

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT