மழை வெள்ள பாதிப்பிலிருந்து சென்னை மீண்டு வருகிறது. இங்கு மனிதம் ஓங்கி நிற்பதால் மனக்காயங்கள் ஆறி வருகின்றன.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் வீடு, உடமைகள் இழந்தும் மன உறுதியை இழக்காத கல்லூரி மாணவி மோகனா, "இந்த சிறு இடர்பாடு என் மன உறுதியைச் சிதைத்துவிடாது. நான் நன்றாக படித்து என் பெற்றோரை நலமாக பேணுவேன்" என்கிறார்.
மணலி எக்ஸ்பிரஸ் சாலையிலிருந்து ஒதுங்கினோம் என்றால் சேறும், சகதியும் நிறைந்த பாதை விரிகிறது. இருபுறமும் வீடுகள் இருக்கின்றன. வெள்ளம் பாரபட்சமின்றி அந்த வீடுகளை கபளீகரம் செய்த சுவடுகள் தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
அங்குதான் மாரியின் வீடும் இருக்கிறது. வீட்டுக்குள் செல்ல வேண்டுமானால் மடங்கி குனிந்து தான் செல்ல வேண்டும். உள்ளே இரண்டு அறைகள் சேற்றால் நிரம்பியிருக்கின்றன. ஆங்காங்கே சேதமடைந்த பொருட்கள், சகதி படிந்த துணிகள், கிழிந்த புத்தகங்கள்.
மாரி வீட்டுக்குள் இருந்தார். மாரிக்கு வயது 46. தினக்கூலி. மனைவி, மகள், 2 மகன்கள் உள்ளனர்.
ஒரு நாளில் பாய்ந்த வெள்ளம் எப்படி தன் வாழ்வை புரட்டிப்போட்டுள்ளது என்பதை நம்மிடம் விவரித்தார் மாரி.
"எல்லாம் போய்விட்டது.. எதுவுமே இல்லை. கூலி வேலை கிடைப்பதைப் பொருத்தே என் சம்பாத்தியம். ஒரு சில மாதம் ரூ.8000 வரை சம்பாதிப்பேன்.தவணை முறையில் ஒரு டி.வி., வாஷிங் மெஷின் வாங்கிப் போட்டிருந்தேன். அவை உருக்குலைந்துவிட்டன. இழப்புகளை எப்படி சரி செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை. மீண்டும் பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்" என்றார்.
அவரது மனைவி அலமேலு கூறும்போது, "நாங்கள் இனிமேல் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இழந்த பொருட்களை எப்படியாவது மீண்டும் சம்பாதிப்போம். எங்கள் கவலையெல்லாம் குழந்தைகளின் கல்வியைக் குறித்தே. என் மகன், மகளின் சான்றிதழ்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. அவற்றை திரும்பப் பெற வேண்டும். இப்போது இங்கு மின்சாரம் இல்லை. குடிதண்ணீர் இல்லை. ஆனால், இதனால் முடங்கிப் போக மாட்டோம். எங்கள் குழந்தைகளைப் பேணி படிக்க வைப்போம்" என்றார்.
தொடர்ந்து பேசிய மாரி - அலமேலு தம்பதியினரின் மகள் மோகனா, "இந்த சிறு இடர்பாடு என் மன உறுதியை சிதைத்துவிடாது. நான் நன்றாகப் படித்து என் பெற்றோரை நலமாக பேணுவேன்" என்கிறார்.
சென்னை பெருமழை இவர்களது உடமைகளை வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றாலும் விடாப்பிடியான மன உறுதியை அதனால் கொஞ்சம்கூட அசைக்கக்கூட முடியவில்லை என்பதே நிதர்சனம்.