இ- பாஸ் பெறப்பட்டுள்ளதா என சோதனையில் ஈடுபட்டுள்ள கரோனா தடுப்பு இ- பாஸ் சோதனை மைய அலுவலர். | படங்கள்: ஜோதி ரவிசுகுமார். 
தமிழகம்

தமிழகத்துக்குள் நுழையும் பிற மாநில வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்; ஓசூர் எல்லையில் கரோனா சோதனை தீவிரம் 

ஜோதி ரவிசுகுமார்

தமிழக ஓசூர் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு இ-பாஸ் சோதனை மையத்தில் கர்நாடக மாநில வாகனங்கள் உட்பட அனைத்து மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இ- பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

மேலும், தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு, ஓட்டுநர் உள்ளிட்டவர்களுக்கு உடல் வெப்பநிலைப் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் புதிய விதிமுறைகளுடன் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநில எல்லையில், தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் பிரதான சோதனைச் சாவடியாக ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி விளங்குகிறது. இந்த சோதனைச் சாவடிக்கு தினமும் கர்நாடகா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்துக்குள் வருகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தமிழக எல்லை மூடப்பட்டு முதல் முறையாக இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மார்ச் 10-ம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் இரண்டாம் முறையாகத் தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடியில் இ-பாஸ் சோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 27-ம் தேதி முதல் கர்நாடகா உட்பட அனைத்து பிற மாநில வாகனங்களுக்கும் இ -பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜுஜுவாடி இ-பாஸ் சோதனை மைய அலுவலர் கூறியதாவது:

''மார்ச் 10-ம் தேதி முதல் இயங்கி வரும் இந்த இ-பாஸ் சோதனைச் சாவடியில் முதல் கட்டமாக கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இ-பாஸ் இன்றி தமிழகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த மூன்று மாநிலங்களைத் தவிர கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்களில் வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர்.

வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிக்கும் மாநகராட்சி ஊழியர்

இந்நிலையில் 27-ம் தேதி இரவு 9 மணி முதல் கர்நாடகாவில் 14 நாட்கள் மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழக எல்லையிலும் கரோனா விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்துக்கு வரும் கர்நாடகா உள்ளிட்ட அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாத வெளிமாநில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த சோதனைச் சாவடியில் மருந்து, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனிடையே ஓசூர் மாநகராட்சி ஊழியர்கள் மூலமாகத் தமிழகத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கிருமிநாசினி தெளிப்பு மற்றும் வாகனங்களில் வருபவர்களின் உடல் வெப்பநிலைப் பரிசோதனை உள்ளிட்ட பணிகளில் 24 மணி நேரமும் ஒரு ஷிப்ட்டுக்கு 5 பேர் வீதம் 3 ஷிப்ட்டுகளில் மொத்தம் 15 மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த கரோனா தடுப்பு இ-பாஸ் கண்காணிப்பு மையத்தில் 24 மணி நேர வாகனச்சோதனை உள்ளிட்ட பணிகளில் காவல்துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஓசூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்''.

இவ்வாறு சோதனை மைய அலுவலர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT