குறுகிய தூரப் பேருந்துகளில் பயணிகள் அதிகளவில் நின்றுகொண்டே பயணிப்பதால், கரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கூட்டமாக பயணிப்பதை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, பேருந்துகளில் அமர்ந்து செல்ல மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா அச்சம் காரணமாக மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்ப்பதால் வெளியூர் விரைவு, சொகுசு பேருந்துகள் கூட்டமின்றி காணப்படுகின்றன. இருப்பினும், மக்கள் அன்றாடம் வேலைக்கு செல்வதால் நகர, மாநகர, குறுகிய தூர பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் குழுவாக செல்வதால், பேருந்துகளில் நின்று கொண்டே பயணம் செய்கின்றனர்.
இது தொடர்பாக நடந்துநர்கள் சிலர் கூறும்போது, “பெரும்பாலான நேரங்களில் பயணிகள் கூட்டம் இருப்பதில்லை. சில நேரங்களில் மட்டுமே பயணிகள் குழுவாக ஒரே பேருந்தில் ஏறுகின்றனர். அடுத்த பேருந்தில் வாருங்கள் என்று நாங்கள் சொன்னால் அதை கேட்பதில்லை. மேலும், எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்’’என்றனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘‘சில பேருந்துகளில் நடத்துநர்களே கூட்டத்தை ஏற்றிச் செல்கின்றனர். பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க கூடாது என்ற விதியை அவர்கள் பின்பற்றுவதில்லை. கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கினால் பயணிகள் கூட்டமாக செல்வதை தவிர்க்கலாம்’’ என்றனர்.