தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துஉள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு அளித்த கருத்துகளின் அடிப்படையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
இதற்கு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி பண்டாரம்பட்டி, புதுத் தெரு பகுதி மக்கள் நேற்று முன்தினம் மாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் கலைந்து சென்றனர். ஆட்சியரிடம், அவர்கள் மனு அளிக்க வருவதாக கிடைத்த தகவலின்பேரில், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமையில் 200 போலீஸார் குவிக்கப்பட்டனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் அரிராகவன், வசந்தி, மாரிச்செல்வன், அருணாதேவி ஆகியோர் தலைமையில், தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி, முத்தையாபுரம், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 பேர் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் ஆட்சியர் செந்தில்ராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலையால் அதிகபட்சம் 35 டன் மட்டுமே ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். மேலும், அதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க குறைந்தது 9 மாதங்கள் ஆகும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் கூறியுள்ளார்.
இந்த தகவல் முழுமையாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை. மாறாக 1,050 டன் மருத்துவ ஆக்சிஜன் தினமும் தயாரித்து இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது.
சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம், முறையாக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து நடத்தப்படவில்லை. முறையாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும். மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட்டை எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும் மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கக் கூடாது என அந்த மனுவில் கூறி உள்ளனர்.
வழக்கறிஞர் அரிராகவன் கூறும்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதை கண்டித்து தூத்துக்குடியில் இன்று (ஏப்.29) கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது என்றார்.
இதேபோல், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் பாத்திமா பாபு தலைமையில் தனியாக வந்து ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், நாளை (30-ம் தேதி) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் பேச்சுவார்த்தை
இவர்களுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உச்ச நீதிமன்ற உத்தரவு விவரங்களை எடுத்துக் கூறினர். மேலும், ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழ்நிலையிலும் திறக்கப்படாது என்றும் உறுதியளித்தனர்.