கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா அச்சத்தின் காரணமாக போதை வாகன ஓட்டுநர்களை பிடிக்க தயங்கும் காவலர்கள்: ‘பிரீத் அனலைசர்’ கருவி பயன்படுத்துவது ஓராண்டாக நிறுத்திவைப்பு

டி.ஜி.ரகுபதி

கரோனா அச்சத்தின் காரணமாக, மது போதையில் வரும் வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க, மாநகர காவல் துறையினர் தயங்குவதால், அப்பணி ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர போக்குவரத் துப் பிரிவு காவலர்கள், தினசரி முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொண்டு, சாலைவிதிகளை மீறும் வாகன ஓட்டுநர் கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வாகனம் ஓட்டுபவர் மது அருந்தியிருப்பதாக சந்தேகம் எழுந்தால், ‘பிரீத் அனலைசர்’ என்ற கருவியை, அவர்களின் வாயில்வைத்து ஊதச் செய்து, மது அருந்தியதை உறுதி செய்யும் காவல் துறையினர், அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் அபராதம் விதித்துவந்தனர். மதுபோதையில் பிடிபடும் வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. மாநகர காவல் துறை வசம் 50-க்கும்மேற்பட்ட பிரீத் அனலைசர் கருவிகள் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்தாண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கியது. உமிழ் நீர்,சளி நீர் உள்ளிட்டவற்றின் மூலம்இத்தொற்று வேகமாக பரவத் தொடங்கியதால், மதுபோதை வாகன ஓட்டுநர்களைப் பிடிக்கபயன்படுத்தப்படும் ‘பிரீத் அனலைசர்’ கருவி பயன்படுத்துவதை கடந்தாண்டு ஏப்ரல் தொடக்கத்திலேயே காவலர்கள் நிறுத்தினர். அதைத்தொடர்ந்து, தற்போது வரை மதுபோதை வாகன ஓட்டுநர்களை பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டுநர் களை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர்கள் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மற்றபடி மதுபோதை வாகன ஓட்டுநர்களை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘ஒட்டுமொத்த மாக, மதுபோதை வாகன ஓட்டுநர்களை கண்டறியும் பணியை நிறுத்துவது சரியானதாக இருக்காது. காவல் துறையினர் பிடிக்க மாட்டார்கள் என மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும், அதன் மூலம் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பாகி விடும். மதுபோதை வாகன ஓட்டுநர்கள் சிக்கினால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உறுதி செய்து, அந்த வாகனஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக மாநகர காவல்போக்குவரத்து துணை ஆணையர் முத்தரசு ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது,‘‘ மாநகரில் கடந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் இறுதி வரை மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 3,491 பேர் பிடிபட்டுள்ளனர்.

இவர்களுக்கு நீதிமன்றம்மூலம் அபராதம் விதிக்கப்பட்டுள் ளது. கரோனா அச்சத்தால் மதுபோதை வாகன ஓட்டுநர்களை பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. பிரத்யேகக் கருவியையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கரோனா தொற்று அச்சம் குறைந்த பின்னர், மதுபோதை வாகன ஓட்டுநர்களைப் பிடிக்கும் பணி தொடங்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT