தமிழகம்

திருப்பூர் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து 3 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த நாய் மீட்பு

இரா.கார்த்திகேயன்

காமநாயக்கன்பாளையம் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து மூன்று ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நாய் மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் அருகே 100 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றில், அப்பகுதியினர் குப்பை கொட்டி வந்தனர். இதனால் 70 அடி ஆழமாக குறைந்தது. குட்டியாக இருந்தபோது பெண் நாய் ஒன்று இந்த கிணற்றில் தவறி விழுந்து வாழ்ந்து வந்தது. இந்நிலையில், அப்பகுதியினர் மூலமாக விலங்குகள் நலவாரியத்தினருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் தெரியவந்தது.

இதையடுத்து, பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 70 அடி ஆழத்தில் இருந்த நாயை மீட்டனர். அந்த நாயை அருகில் உள்ள குடும்பத்தார் வளர்ப்பதாக தெரிவித்ததால், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, "பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் கிணற்றில் தவறி விழுந்த நிலையில், 3 ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வருகிறது. பாறைக்குழிபோல மாறிய கிணற்றில், எஞ்சியுள்ள உணவுகளை அப்பகுதியில் உள்ள உணவகங்களை நடத்தி வருபவர்கள் கொட்டி வந்துள்ளனர். அந்த உணவை உண்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளது. மேலும், சீரான இடைவெளியில் தண்ணீர் உள்ளிட்டவற்றை அப்பகுதியினர் வழங்கி வந்ததாலும், அந்த நாய் உயிர் வாழ்ந்து வந்துள்ளது" என்றனர்.

SCROLL FOR NEXT