காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்தவடக்கு மலையம்பாக்கம், சோழன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவில்ராஜ்(25), இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாய் மற்றும் அண்ணன்களிடம் தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கோவில்ராஜ் வழக்கம்போல் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், வீட்டுக்கு வெளியே சென்று படுத்துக் கொண்டார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது கோவில்ராஜ் இறந்து கிடப்பதாக அவரது அண்ணன்கள் தெரிவித்ததையடுத்து உறவினர்கள் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவில்ராஜ் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது நண்பர் அளித்த புகாரின் பேரில் மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனார். இதில் அவரது அண்ணன்கள் மதன்ராஜ்(25), மைக்கேல்ராஜ்(27), தாய் சாராள்(50) ஆகியோர் ஆத்திரம் தாங்க முடியாமல் ஒன்று சேர்ந்து குடிபோதையில் வீட்டுக்குவெளியே படுத்திருந்த கோவில்ராஜின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் குடிபோதையில் இறந்துவிட்டதாக நாடகமாடியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார் புதைக்கப்பட்ட கோவில்ராஜ் உடலைத் தோண்டி எடுத்துபிரேதப் பரிசோதனை செய்ய முடிவுசெய்துள்ளனர். இதையடுத்து கோவில்ராஜ் புதைக்கப்பட்ட சுடுகாட்டில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.