தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தென் கடலோர பகுதிகளில் 2 நாள் மழை

செய்திப்பிரிவு

குமரிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தென் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழைக்காலம் முடிய இன்னும் 14 நாட்கள் உள்ள நிலையில், தென் தமிழகம், கேரளம், லட்சத்தீவுகள் பகுதியில் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவுகள் அருகில் நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே இந்த மழைக்கு காரணம். இந்நிலையில், குமரிக் கடல் பகுதியில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது இலங்கை கடல் பகுதி வரையில் நீடிப்பதால், கடலார மாவட்டங்களில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இன்றும் நாளையும் ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

வரும் 19, 20-ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில் செங்கோட்டையில் 6 செ.மீ., கோவில்பட்டி,சாத்தூர் 4, முதுகுளத்தூர் 3 செ.மீ. மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை மற்றும் நெல்லை மாவட்டத்தின் இதர சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

SCROLL FOR NEXT