கர்நாடக மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கரோனா ஊரடங்கு எதிரொலியாக இரு மாநிலங்களுக்கு இடையே அரசுப் பேருந்துகளின் இயக்கம் நேற்று (ஏப்ரல் 27-ம் தேதி) இரவு 9 மணி முதல் 14 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகளும், பெங்களூரு நகரிலிருந்து ஓசூர் நகருக்கு வரும் பயணிகளும் இரு மாநில அரசுப் பேருந்துகள் இன்றித் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா எதிரொலியாக ஏப்ரல் 27-ம் தேதி இரவு 9 மணி முதல் மே மாதம் 10-ம் தேதி வரை 14 நாட்கள் மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 9 மணி முதல் தமிழகம் - கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே அரசுப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓசூர் வழியாக பெங்களூரு சாட்டிலைட் பேருந்து நிலையம் வரை இயக்கப்பட்டு வந்த அனைத்துத் தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூரிலேயே நிறுத்தப்படுகின்றன.
ஓசூரில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள், தமிழக எல்லையான ஜுஜுவாடி வரை இயக்கப்பட்டு வரும் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணித்து அங்கிருந்து சுமார் 1.50 கி.மீ. தூரம் வரை நடந்து சென்று, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி வழியாக அம்மாநிலத்துக்குள் செல்கின்றனர். அதேபோல கர்நாடகாவில் அரசுப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கிருந்து தமிழகம் வரும் பயணிகள் அம்மாநில எல்லையான பெங்களூரு அத்திப்பள்ளி வழியாக நடந்து வந்து ஜுஜுவாடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக அரசுப் பேருந்துகளில் பயணித்து ஓசூர் பேருந்து நிலையத்தை அடைந்து, அங்கிருந்து சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓசூர் பேருந்து நிலைய உதவி மேலாளர் கூறும்போது, ''கர்நாடக மாநிலத்தில் மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த சேலம் மண்டலப் பேருந்துகள் - 168, தருமபுரி மண்டலப் பேருந்துகள் - 140, விழுப்புரம் மண்டலப் பேருந்துகள் - 110 என மொத்தம் 418 விரைவுப் பேருந்துகள் ஓசூர் வழியாக பெங்களூரு நகருக்கு இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
ஓசூர் - கர்நாடகா அத்திப்பள்ளி இடையே இயக்கப்பட்டு வந்த 20 தமிழக அரசுப் பேருந்துகளும் தற்போது ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி அருகே நிறுத்தப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் முகக்கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.