தமிழகம்

புதுச்சேரியில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு; அத்தியாவசியக் கடைகள் தவிர பிற கடைகள் இயங்கத் தடை

அ.முன்னடியான்

புதுச்சேரியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியக் கடைகள் தவிரப் பிற கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு செயலர் அசோக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

‘‘புதுச்சேரியில் ஏற்கெனவே 30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த ஊரடங்கு வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து வெளியே நடமாடக்கூடாது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லத் தடை இல்லை. வேட்பாளர்கள், முகவர்கள் கண்டிப்பாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தவிர்க்க முடியாவிட்டால் ரேபிட் பரிசோதனை செய்யலாம். இந்தச் சான்றுகளுடன் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வர வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழ் பெற தன்னுடன் 2 நபர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும். வெற்றி ஊர்வலங்கள் நடத்தக் கூடாது.’’

இவ்வாறு செயலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஊரடங்கு தொடர்பாகப் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் இன்று(ஏப். 28) செய்தியாளர்களிடம் கூறியதாவது,

‘‘புதுச்சேரி மாநிலத்தில் கரோனா 2-வது அலையைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காகத் தளர்வுகளுடன் கூடிய சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.

அதன்படி ஏப்.26-ம் தேதி தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த நடைமுறைகள் ஏப்.30-ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது, கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரியில் ஏப். 30-ம் தேதி வரை கொடுத்த தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள், மே.3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குக் கட்டுப்பாடுகளின்போது, கடைகளைத் திறக்கலாமா என்று வியாபாரிகள், பொதுமக்கள் சிலர் சந்தேகம் கேட்கின்றனர். அரசாணைப்படி அத்தியாவசியக் கடைகள், நிறுவனங்களை மட்டுமே திறக்க வேண்டும்.

உணவு தொடர்பான கடைகள், பால், மருத்துவம், மளிகை, காய்கறி, பழங்கள், தகவல் தொழில்நுட்பம் போன்றவை இயங்கலாம். ஹார்டுவேர் கடைகள், நகைக் கடைகள், துணிக்கடைகள், பெரிய மால்கள், அதிலுள்ள மளிகைக் கடைகள் இயங்க அனுமதியில்லை. தேநீர்க் கடை, உணவகங்களைத் திறக்கலாம், அமர்ந்து சாப்பிடக் கூடாது. தொழிற்சாலைகள் இயங்கலாம். இதனைத் தவிர்த்து எதனையும் செய்யக்கூடாது. தினசரி இரவு 10 மணி வரை அத்தியாவசியக் கடைகள் இயங்கலாம்.

இரவு 10 முதல் காலை 5 மணி வரை எந்தக் கடைகளும் இயங்காது. வாக்கு எண்ணிக்கை தினத்தில் கூட்டம் கூடக்கூடாது. வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது ஊரடங்குக் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.’’

இவ்வாறு ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்தார்.

மதுக்கடைகளுக்கும் தடை

புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘3-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் வரும் 3-ம் தேதி அதிகாலை 5 மணி வரை அடைக்கப்பட வேண்டும். மீறுவோர் மீது கலால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT