வடமதுரை காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கில் சார்பு ஆய்வாளர், 2 போலீஸாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மொட்டனம்பட்டியில் 2010 ஏப்.10-ம் தேதி நடந்த திருவிழாவில் அதே ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் கத்தியைக் காட்டி மிரட்டியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
வடமதுரை சார்பு ஆய்வாளர் திருமலை முத்துச்சாமி, ஏட்டுகள் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோர் செந்தில்குமாரை வடமதுரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அங்கு போலீஸார் தாக்கியதில் செந்தில்குமார் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
சிபிசிஐடி விசாரணை
வடமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உண்மைகள் மறைக்கப்படுவதாகக் கூறி இறந்த செந்தில்குமாரின் உறவினர்கள் சிபிசிஐடி விசாரணை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீஸார், சார்பு ஆய்வாளர் திருமலை முத்துச்சாமி, போலீஸார் ரவிச்சந்திரன், பொன்ராம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைக்குப் பின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 69 பேர் சாட்சியம் அளித்தனர். இரு தரப்பு இறுதி வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி சரவணன் நேற்று தீர்ப்பளித்தார்.
இதில் சார்பு ஆய்வாளர் திருமலை முத்துச்சாமி (41), போலீஸார் ரவிச்சந்திரன் (58), பொன்ராம் (49) ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.
இவர்களுக்குத் தண்டனையாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், தலா 5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு போலீஸ்காரர் அப்துல் வகாப் சாலை விபத்தில் இறந்ததால் வழக்கில் இருந்து ஏற்கெனவே விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது