புவனேஷ்வரி 
தமிழகம்

பெருந்துறை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய அரசு பெண் மருத்துவர் கரோனா பாதிப்பால் உயிரிழப்பு: பணியாளரும் இறந்ததால் அச்சம்

செய்திப்பிரிவு

கரோனாவால் பாதிக்கப்பட்ட பெருந்துறை அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் மற்றும் அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவராகப் பணிபுரிந்து வந்தவர் புவனேஷ்வரி (58). கடந்த வாரம் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், அதன்பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார். நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது வீட்டில் வேலை செய்து வந்த தேவி (55), கடந்த மூன்று நாட்களாக கை, கால் வலி மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவி உயிரிழந்தார். தேவியின் சகோதரர் பெருந்துறை போலீஸாரிடம் அளித்த மனுவில், தனது சகோதரி கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடவில்லை

இதனிடையே, கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் புவனேஷ்வரி, கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என மருத்துவர்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்பு அவருக்கு இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட அச்சத்தால் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் பெற பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி டீன் மணியை பலமுறை தொடர்பு கொண்டும், அவர் செல்போனை எடுப்பதைத் தொடர்ந்து தவிர்த்தார்.

SCROLL FOR NEXT