தமிழகம்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 5,913 ரேஷன் அட்டைகளுக்கு நகல்கள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் காமராஜ் தகவல்

செய்திப்பிரிவு

வெள்ளத்தால் குடும்ப அட்டை களை இழந்த 5 ஆயிரத்து 913 பேருக்கு நகல் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

பருவமழையின் போது ரேஷன் அட்டைகளை இழந்தவர்களுக்கு நகல் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு, தி.நகர் பகுதி குடிமைப் பொருள் வழங்கல் துறை மண்டல அலுவலகத்தில் அமைச்சர்கள் பா.வளர்மதி, ஆர்.காமராஜ் ஆகியோர் நகல் அட்டைகளை வழங்கினர்.

அப்போது உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசிய தாவது:

வடகிழக்கு பருவமழையின் போது குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு நவம்பர் 25 முதல் கடந்த 12-ம் தேதி வரை முகாம்கள் அமைக்கப்பட்டு, சென்னை வடக்கு, தெற்கு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மனுக்கள் பெறப்பட்டன. இதில் நகல் அட்டை கோரி 7ஆயிரத்து 773 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 6 ஆயிரத்து 237 நகல் அட்டைகள் புதிதாக அச்சடிக்கப்பட்டு, 5 ஆயிரத்து 913 பேருக்கு வழங்கப் பட்டுள்ளன.

தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல்வர் அறிவித்தபடி 14-ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. நான்கு மாவட்டங்களிலும் அமைக்கப் பட்டுள்ள 62 முகாம்களில் நகல் அட்டை கோரி 3 ஆயிரத்து 914 பேர் மனு அளித்துள்ளனர். இவர்களில் ஆயிரத்து 420 பேருக்கு நகல் அட்டை அச்சடிக்க அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, நகல் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT