செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட விவகாரத்தில் மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகத்தை தமிழக அரசு விளக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பெருத்த சேதம் ஏற்பட்டதாக வரும் செய்திகளால் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவு குறித்தும், நிவாரணம் வழங்கப்படுவது குறித்தும் உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து பொது நல வழக்காக எடுத்துக்கொண்டு வேதனை தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்தும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தி, அதன் அடிப்படையில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகத்தைப் போக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள தொகையும், மத்திய அரசு முதல்கட்டமாக அறிவித்த ரூ.940 கோடியும், 2-வது கட்டணமாக அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் கோடியும் போதுமானதல்ல. எனவே, தமிழக அரசும், மத்திய அரசும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மேலும் உயர்த்தித் தர வேண்டும்.