காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் இந்த முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் மாமல்லபுரம் பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த தருணத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, அனைத்துத் துறை ஊழியர்களும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி, முகாம்களில் தங்கவைத்து உணவு அளித்தனர்.
தன்னலம் பாராது செயல்பட்ட அரசு ஊழியர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது என்று ஆட்சியர் கஜலட்சுமி பேசினார்.