வேலூர் மாநகராட்சியில் விதி களை மீறி கண்ணாடி டம்ளரில் தேநீர், காபி விற்பனை செய்த கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் மூடப்பட்டதுடன் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மளிகை மற்றும் காய்கறி கடைகளில் விற்பனையின்போது 50 சதவீதம் பேர் மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய அறிவிப் பால் வேலூர் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் நடைமுறையில் உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி பகுதிகளில் மாநகர நல அலுவலர் மருத்துவர் சித்ரசேனா தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.5 ஆயிரம் அபராதம்
பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் கண்ணாடி டம்ளரில் வாடிக்கையாளர்களுக்கு தேநீர் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆவின் பாலக உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகில் பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே யுள்ள பிரபல தேநீர் கடையில் கண்ணாடி டம்ளரில் விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. அந்த கடைக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் கரோனா விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.