உலகளாவிய அளவில் கரோனாவால் பொதுமக்கள் பாதித்து அவதியுற்று வரும் நிலையில், தொற்று நோய் ஒழிந்திட வேண்டி சேலத்தில் திருநங்கைகள் ஆடிப் பாடி , கும்மியடித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
உலகம் முழுவதும் வாழும் பொதுமக்கள் கரோனா தொற்று நோயால் பாதிப்படைந்து அவதியுற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம் அலை கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். மேலும், இதுவரை 1.90 லட்சம் பேர் இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் தினமும் 15,000க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், கரோனா தொற்று நோய் ஒழிந்திட வேண்டி, சேலத்தில் திருநங்கைகள் கும்மியடித்துச் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, சந்தப்பேட்டை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், திருநங்கைகள் திரளாகக் கலந்து கொண்டனர். உலக அளவில் கரோனா தொற்று நோய் மக்களிடையே பரவாமல், ஆரோக்கியம் மேம்பட வேண்டி சிறப்புப் பிரார்த்தனை மற்றும் பூஜைகளை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் திருநங்கைகள் நடத்தினர்.
இதில் திருநங்கைகள் அம்மனுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி, 108 தேங்காய் உடைத்து, கற்பூர தீ ஜூவாலையை வட்டமிட்டபடி ஆடி, பாடி, கும்மியடித்து சிறப்புப் பிரார்த்தனை மற்றும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது, ''ஆண்டுதோறும் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று வழிபாடு நடத்துவோம். இன்று (27-ம் தேதி) கூவாகம் திருவிழா கரோனா தொற்றால் நடத்தப்படவில்லை. அதனால், சேலம், செவ்வாய்ப்பேட்டை, சந்தப்பேட்டை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்குத் திரளாக வந்து, கரோனா தொற்று நோய் தீரவும், பொதுமக்கள் ஆரோக்கியத்துடன், இயற்கை வளம் செழிக்க வாழ்ந்திட வேண்டியும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு, அம்மனுக்கு
அங்கவஸ்திரம் சாற்றி, படையலிட்டு, கற்பூரம் ஏற்றி கும்மியடித்துச் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டோம்" என்றனர்.