மறைந்த நடிகர் விவேக்கின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
நகைச்சுவை நடிகரும், தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவரும், 'சின்ன கலைவாணர்' என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக்குக்கு (59) கடந்த 16-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் ஏப்.17-ம் தேதி காலை உயிரிழந்தார்.
அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரிலும் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும், மு.க.ஸ்டாலின் சார்பில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் விவேக் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இன்று (ஏப். 27) சென்னையில் உள்ள விவேக் இல்லத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றார். விவேக் குடும்பத்தினருக்கு அவர் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.