கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவரும் நிலையில், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசுப் பணியாளர்களை 50 விழுக்காடு எனச் சுழற்சி முறையில் பணியாற்ற ஆணையிட வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுத் துறை, பணியாளர் (ம) நிர்வாகச் சீர்திருத்தத்துறை, மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத் துறை ஆகிய துறைகளின் அரசு முதன்மைச் செயலாளர்களுக்கு வெங்கடேசன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
''இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை வெகு தீவிரமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் அரசின் சிறப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் வெகுவாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் நோய்ப் பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
தலைமைச் செயலகம் மற்றும் அமைச்சுப் பணி தலைமை அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களில் பெரும்பாலானோர் சென்னையின் அண்டை மாவட்டங்களில்தான் வசித்து வருகின்றனர். அவர்கள் அலுவலகம் வந்து செல்வதற்கு மின்சார ரயில் போக்குவரத்தினை நம்பியுள்ளனர். அலுவலக நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசல் என்பது எப்போதும் போல் அதிகமாகவே உள்ளது. மாநகரப் பேருந்துகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது.
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அலுவலக நேரங்களில் பொதுப் போக்குவரத்தினை நம்பியுள்ள அரசு ஊழியர்கள், கூட்ட நெரிசலில் சிக்கித்தான் அலுவலகம் வந்து செல்கின்றனர். தற்போதைய நிலையில், ஏறத்தாழ 100க்கும் அதிகமான தலைமைச் செயலகப் பணியாளர்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைமைச் செயலகத் துறைகளில் பிரிவுகள் உள்ள பகுதிகளில், அதிலும் குறிப்பாக பிரதானக் கட்டிடத்தில் உள்ள பொது, நிதி, வருவாய், உள் மற்றும் பணியாளர் (ம) நிர்வாகச் சீர்திருத்தத் துறைகளிலும் சட்டப்பேரவைச் செயலகத்திலும், அரசின் விதிமுறைகளின்படி தனிமனித இடைவெளியினைப் பின்பற்றிப் பணியாற்றுவது என்பது இயலாத ஒன்றாக உள்ளது. இதைப்போன்ற இட நெருக்கடி என்பது சென்னையில் பல துறைத் தலைவர் அலுவலகங்களில் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இதனால் கடுமையாகத் தொற்று பரவும் அபாயகரமான நிலை நிலவுகிறது.
கடந்த ஆண்டில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, தமிழக அரசு 50 விழுக்காடு பணியாளர்களைச் சுழற்சி முறையில் பணியாற்ற ஆணையிட்டது. தற்போது, கரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பினைக் கருத்தில் கொண்டு, அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழக அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு ஊழியர்களை 50 விழுக்காடு எனச் சுழற்சி முறையில் பணியாற்றிட ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.