சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது அதிக பாரத்தை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களே என்பதால் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அதிக அபராதம், வாகன உரிமையாளர்களுக்கு 5 ஆண்டுவரை சிறைத்தண்டனை கிடைக்கும் என அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
“உயிரிழப்பு ஏற்படுத்தக்கூடிய வாகன விபத்துகளில் பெரும்பாலான விபத்துகள் அதிவேகமாக இயக்கபடும் வாகனங்களே ஆகும். அடுத்தப்படியாக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களினால் ஏற்படும் சாலை விபத்துகளினால் உயிர்பலி ஏற்படுகிறது.
மோட்டார் வாகனங்கள் பாதுகாப்பு நோக்கத்துடன் விபத்துகளை தவிர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு, மோட்டார் வாகனச் சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்டு போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 113-ன்படி ஒவ்வொரு சரக்கு வாகனத்திற்கும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எடையுடன் பதிவு சான்று வழங்கப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.
சரக்கு வாகனங்களில் பதிவுச் சான்றின்படி அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக பாரம் ஏற்றி இயக்கும் வாகன உரிமையாளர்கள் மீது 1988-ம் வருடத்திய மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 194-ன் படி அதிக பாரம் ஏற்றியதற்கு ரூ.20,000/- அபராதமும், கூடுதலாக வாகனத்தில் ஏற்றப்படும் ஒவ்வொரு டன்னிற்கும் ரூ.2000-/ வீதம் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இத்துடன் கூடுதலாக ஏற்றப்பட்டுள்ள சரக்குகளை இறக்கி வைக்கப்படும் செலவுத் தொகையும் வாகன உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. மேலும், மேற்கண்ட சட்டத்தின்படி சரக்கு வாகனங்களின் அனுமதிச் சீட்டினை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 18.08.2015 அன்று உருவாக்கப்பட்ட சாலை பாதுகாப்புக் குழுவின் வழிகாட்டுதலின்படி அதிக பாரம் ஏற்றி இயக்கப்படும் வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மத்திய, மாநில அரசுகள், அவ்வரசின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில், அதிக பாரம் ஏற்றி இயக்கப்படும் சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் மீது 1984-ம் வருடத்திய பொது சொத்து பாதிப்பு தடுப்புச் சட்டத்தின்படி அதிகபட்ச சிறைத்தண்டனை 5 வருடம் மற்றும் அபராதம் விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தங்களின் சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றி வாகனங்களை இயக்குவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் மேற்கண்ட 1988-ம் வருடத்திய மோட்டார் வாகனச் சட்டம் 194-ன் படி அதிக பாரம் ஏற்றியதற்கு ரூ.20,000/-மும், கூடுதலாக வாகனத்தில் ஏற்றப்படும் ஒவ்வொரு டன்னிற்கும் ரூ.2000-/ வீதம் அபராதமும் வசூலிக்கப்படும். இத்துடன் கூடுதலாக ஏற்றப்பட்டுள்ள சரக்குகளை இறக்கி வைக்கப்படும் செலவுத் தொகையையும் வாகன உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படுவதுடன் வாகன அனுமதிச் சீட்டினை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும்.
மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வாகனத்தை இயக்கியவர் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும், 1984-ஆம் வருடத்திய பொது சொத்து பாதிப்பு தடுப்புழிச் சட்டத்தின்படி அதிகபட்சமாக 5 வருட சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்க நேரிடும் என இதன்மூலம் எச்சரிக்கப்படுகிறது”.
இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.